அதியமான்கோட்டையில் கோவில் விழா:அம்மன் பந்தகாசி ஊர்வலம்
அதியமான்கோட்டையில் கோவில் விழாவையொட்டி அம்மன் பந்தகாசி ஊர்வலம் நடந்தது.
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் வலம் வருதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 29-ந் தேதி கும்ப பூஜையும், 31-ந் தேதி கோ பூஜை மற்றும் விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
கடந்த 1-ந் தேதி காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், 3 மற்றும் 4-ந் தேதிகளில் அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் பெரிய தேரோட்டம் நடந்தது. 5-ந் தேதி பெரியதேர் நிலை அடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று குதிரை வாகனத்தில் அம்மன் பந்தகாசி ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காளியம்மன் ஊர்வலத்துடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.