திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் மலையடிவாரம் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திண்டுக்கல் மலையடிவாரம் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி காலை 7 மணி அளவில் மூலவர் சுவாமி சீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உட்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம், ராஜ அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் கொடிமரத்தின் முன்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், நவக்கிரக பூஜையும் நடந்தது.
அதன்பிறகு 10.30 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அன்ன வாகனத்தில் சுவாமி ரத வீதிகள் வழியாக வலம் வருதல் நடைபெற்றது.
இந்த திருவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 13 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி அடுத்த மாதம் 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சுவாமி நாகல்நகர் புறப்பாடு, 3-ந்தேதி மாலை 6 மணி அளவில் திருக்கல்யாணம், 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருத்தேர் புறப்பாடு, 7-ந்தேதி தெப்ப உற்சவம், 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.