அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா
திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்றாகும். அட்ட வீரட்டான தலங்கள் என்பவை சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நடந்த 8 தலங்களாகும். காவிரி தென்கரை சிவத்தலங்களில் 47-வது தலமான இங்கு காலசம்ஹார மூர்த்தி உற்சவராக அருள்பாலித்து வருகிறார். அமிர்தமே லிங்கமாக வீற்றிருப்பதால் இக்கோவில் இறைவனை அமிர்தலிங்கேஸ்வரர் என அழைக்கிறார்கள். இங்கு ஆயுள் விருத்திக்கான பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
ஆடிப்பூர திருவிழா
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
1-ந் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.