மாணவர்களை ஆசீர்வதித்து வரவேற்ற கோவில் யானை

மயிலாடுதுறையில், கோடை விடுமுறைக்குப்பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை கோவில் யானை ஆசீர்வதித்து வரவேற்றது.

Update: 2022-06-13 17:25 GMT

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், கோடை விடுமுறைக்குப்பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை கோவில் யானை ஆசீர்வதித்து வரவேற்றது. முதல் நாளில் யானையின் 'துதிக்கை'யால் அளிக்கப்பட்ட வரவேற்பு மாணவர்களிடையே 'நம்பிக்கை'யுடன், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

கொரேனாவால் திறக்கப்படாத பள்ளிகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வழக்கம்போல் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளி வகுப்பறைகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறைகளில் அளவளாவி பாடம் கவனித்து வீட்டுக்கு சென்று வந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் அவரவர் வீடுகளில் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பாடத்தை கவனித்து வந்ததால் மாணவர்கள் ஒருவித சோர்வுடன் வீட்டிலேயே முடங்கி கிடக்க நேரிட்டது.

பள்ளிகள் வழக்கம்போல் திறப்பு

கொரோனா தொற்றின் தாக்கம் தணிந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் இந்த கல்வி ஆண்டில்(2022-2023) பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் மாதம் 13-ந் தேதி திறக்கப்படும் என்று அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பு சோர்ந்து கிடந்த மாணவர்கள் மத்தியில் புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியது. பள்ளிகள் திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர். அந்த இனிய நாள் நேற்று வந்தது. தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

வரவேற்பு ஏற்பாடுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 489, அரசு உதவி பெறும் பள்ளிகள் 178, தனியார் பள்ளிகள் 176 என மொத்தம் 843 பள்ளிகளிலும் நேற்று முதல் நாள் வகுப்புகள் நடந்தன. விடுமுறைக்குப்பின் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்றில் செய்யப்பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடு மாணவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

யானை அளித்த வரவேற்பு

அந்த பள்ளியில் மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகத்தினர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை 'அபயாம்பிகையை' அழைத்து வந்து இருந்தனர். பள்ளி வாசலில் நின்றிருந்த யானை, மாணவர்களின் தலையில் துதிக்கையை வைத்து ஆசீர்வதித்து வரவேற்பு அளித்தது.அப்ே்பாது மாணவர்கள் யானைக்கு நன்றி சொல்லும் விதமாக மலர்களை தூவி யானையை வணங்கினர். பதிலுக்கு யானையும் மாணவர்கள் மீது துதிக்கை மூலம் மலர்களை தூவியது. இந்த வரவேற்பு தந்த உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

முன்னதாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். பள்ளி திறந்த முதல் நாளில் யானையின் 'துதிக்கை' தந்த 'நம்பிக்கை'யுடன் மாணவர்கள் தங்கள் பாடங்களை படிக்க தொடங்கினர்.





Tags:    

மேலும் செய்திகள்