கொளுத்தும் வெயிலிலும் பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
பூவோடு
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கடந்த 4-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் திருக்கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவை கலந்த புனித நீரை கம்பத்தில் ஊற்றி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 7-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு (தீச்சட்டி) எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
ரிஷப வாகனம்
உடுமலை பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் வெறுங்காலுடன் கையில் தீச்சட்டி ஏந்தி பக்திப் பரவசத்துடன் கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். பின்னர் இரவு ரிஷப வாகனத்தில் மாரியம்மன் புஷ்ப அலங்காரத்துடன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். பொள்ளாச்சி சாலை, தளி சாலை, குட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆங்காங்கே சிறப்பு பூஜைகளும் மேற்கொண்டனர்.