பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா
நத்தக்காடையூர் அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
நத்தக்காடையூர் அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
பட்டத்தரசி அம்மன்
நத்தக்காடையூர் அருகே உள்ள சிவசக்திபுரம் பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 5 -ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 6 மணிக்கு பங்குனி பவுர்ணமி பூஜை நடத்தப்பட்டு 6.30 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மதியம் 12.15 மணிக்கு அன்னதான பூஜை நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு பட்டத்தரசி அம்மனுக்கு காவிரி தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அபிஷேகம்
பின்னர் மாலை 6 மணிக்கு சித்தி விநாயகர், பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, 10 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவில் பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.