நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீ மிதி விழா

Update: 2023-03-27 18:45 GMT

பரமத்திவேலூர்:

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழா

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை இரவு கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடந்தது.

19-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், 25-ந் தேதி வரை இரவு அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. 26-ந் தேதி வடிசோறு படைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை கோவில் முன்பு 62 அடி நீளத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் ராஜா கோவிலில் இருந்து மணிவேல் புறப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

நேர்த்திக்கடன்

அதைத்தொடர்ந்து தீ மிதி விழா தொடங்கி, இரவு 7 மணி வரை நடந்தது. தமிழகத்திலேயே மிக நீளமான குண்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் தீ மிதித்தனர். மேலும் ஆயிரக்கணகான பெண் பக்தர்கள் தலையில் நெருப்பு தழலை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கிடா வெட்டுதலும், மாலை மாவிளக்கு பூஜை, அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவையும் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை கம்பத்தை ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி பரமத்திவேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்