எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் முருக பெருமானின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கிடையே திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில்களின் உப கோவில்களான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் முதலில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக அர்த்நாரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியார்கள் கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினர்.
கட்டளைதாரர்களின் கட்டளை பூஜைகள், ரதோற்சவம் நடக்க உள்ளது. இதில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகசாமி, கைலாசநாதர் சுகுந்த குந்தலாம்பிகை, சண்டிகேஸ்வரர், அஷ்ட தேவர் 2 தேர்களில் நான்கு ரதவீதிகளில் பவனி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.