வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-01-02 18:45 GMT

தர்மபுரி:

வைகுண்ட ஏகாதசியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

தர்மபுரி கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு உபகார பூஜைகள் நடந்தன.

இதையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பரவாசுதேவ சாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி வீதிஉலா மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கோவில் ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு லட்டு பிரசாத குமு சார்பில் லட்டு மற்றும் ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

குமாரசாமிப்பேட்டை

தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் சாமி அனந்தசயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில், இலக்கியம்பட்டி கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், லளிகம் சென்றாய சாமி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெங்கட்ரமண சாமி

இதேபோன்று பிரசித்தி பெற்ற மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று புலிக்கரை சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செட்டிக்கரை பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

லட்சுமி நரசிம்மர்

பென்னாகரம் அருகே அளேபுரத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, லட்சுமி நாராயண சாமி அதன் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், கெங்குசெட்டிபட்டி பெருமாள் கோவில், மோதூர் பெருமாள் கோவில் சஞ்சீவிராயன் மலைக்கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்