அனுமன் ஜெயந்தியையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-12-23 18:45 GMT

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி.ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்ககாசு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் 12 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

வே.முத்தம்பட்டி

வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வீரதீர ஆஞ்சநேயர் கோவில்

இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி 10,008 வடை மற்றும் 108 கரும்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்கார சேவை நடைபெற்றது. குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மாதேஅள்ளி கோவில்

பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் ஸ்ரீவீரமாருதி ராயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம், வடை மாலை, பழங்கள், காய்கறிகள் கொண்ட மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாதேஅள்ளியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஏ.கொல்லஅள்ளி மொடக்கேரி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகள் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்