பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் செட்டியார் தெருவில் பழமைவாய்ந்த வல்லப விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி யாகமும், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து யந்திரஸ்தாபனம், சாமிகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 6 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் வல்லப விநாயகர், விசாலாட்சி அம்பிகை சமேத பாணலிங்க விஸ்வேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், கால பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வல்லப விநாயகர் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.