பல நூறு ஆண்டுகள் கடந்த பாட்டி-தாத்தா கோவில்

குடிமங்கலம் அருகே பல நூறு ஆண்டுகள் கடந்த பாட்டி-தாத்தா கோவிலை பழமை மாறாமல் கிராம மக்கள் ஒன்றிணைந்து பாதுகாத்து வருகிறார்கள்.

Update: 2023-08-28 18:38 GMT

குடிமங்கலம் அருகே பல நூறு ஆண்டுகள் கடந்த பாட்டி-தாத்தா கோவிலை பழமை மாறாமல் கிராம மக்கள் ஒன்றிணைந்து பாதுகாத்து வருகிறார்கள்.

நடுகல் வழிபாடு

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த தமிழர் வாழ்வியலில் காலம்தோறும் வெவ்வேறு விதமான வழிபாட்டு முறைகள் இருந்துள்ளன. கிபி 6-ம் நூற்றாண்டு வரை சிலை வழிபாடு மற்றும் உருவ வழிபாடு இல்லை. அதேநேரத்தில் நடுகல் வழிபாடு இருந்துள்ளதற்கான சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. வீரர்களுக்கும் மன்னர்களுக்கும் அவர்கள் இறந்த பிறகு நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் இருந்துள்ளது.

'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே'

என்ற புறநானூற்றுப் பாடல் நடுகல் வழிபாடு குறித்து பேசுகிறது. அதன்படி ஒத்துப்போகாத பகைவர்களை எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத்தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத்தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என்று கூறுவதாக அந்த பாடலின் பொருள் உள்ளது.

பனை ஓலை கூரை

கோவில் கட்டிடக்கலைக்கு முன், அனைத்து மக்களும் வழிபடும் வகையில் திறந்த வெளியில் மக்கள் வசிப்பிடங்களில் கோவில்கள் இருந்துள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்களுக்கு இயற்கையாக விவசாய நிலங்களில் கிடைக்கும் பனை ஓலைகள், கம்புதட்டுகள் போன்றவற்றால் மேற்கூரை அமைக்கும் பழக்கம் காலம் காலமாக நம் மக்களிடம் இருந்துள்ளது. தற்போது இந்த பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் மாறி மேல்நிலையாக்கம் பெற்று பெருங்கோவில்களாகவும், கோபுரங்களாகவும் உயர்ந்து நிற்கிறது.

இவ்வளவு காலமாற்றத்தில் பழமை மாறாத கோவில்களை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தேடித்தேடி ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் குடிமங்கலத்தை அடுத்த சின்ன மோளரப்பட்டி பகுதியில் 'அவ்வா தாத்தா கோவில்' என்றழைக்கப்படும் பாட்டி தாத்தா கோவிலை இன்று வரைக்கும் பழமையான முறையில் பனை ஓலையில் மேற்கூரை அமைத்து அந்த கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்த கோவிலில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்கள் சிவக்குமார், அருள் செல்வன் ஆகியோருடன் இணைந்து உடுமலை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சுப.முனியப்பன் ஆய்வு மேற்கொண்டார். இவர் தம்முடைய முனைவர் பட்ட ஆய்வேடான 'உடுமலை பொள்ளாச்சி வட்டார சிறு தெய்வ வழிபாடு' என்ற தலைப்பில் பாரதியார் பல்கலைக்கழத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.

நவ கண்டம்

இந்த கோவில் குறித்து அவர் கூறியதாவது:-

'சங்க இலக்கியத்தில் கூறப்படும் மக்கள் வழிபடும் கோவில்கள் இதுபோல திறந்த வெளியில், அனைவரும் வந்து வழிபட்டு செல்லும் வகையில் அழகியலாக அமைந்திருக்கும். அந்த வடிவமைப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில் பெரிய பெரிய கற்களைக் கொண்டு கல்லரண் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு 4 மூலைகளிலும் அதற்கு முட்டுக்கல்லும் கொடுக்கப்பட்டுள்ளது.

பல 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த கோவிலை பழமை மாறாமல் ஊர் மக்கள் பாதுகாத்து வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் போர் நடந்ததற்கான எறிகற்கள், சாம்பல் மேடுகள் உள்ளது. இந்த அவ்வா தாத்தா கோவிலில் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமாவாசை நாட்களில் பொங்கல் வைத்து வழிபடுவதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அடிவள்ளி, கம்பாளபட்டி, பொள்ளாச்சி, நெகமம் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த கோவிலின் சிலைகளில் குதிரை மீதுஅமர்ந்து ஒரு வீரன் வருவதாகவும், நவகண்டம் எனப்படும் வகையில் ஒரு வீரன் தன்னைத் தானே கழுத்தறுப்பது போன்ற சிற்பமும், ஒரு அரசன், அரசி இருப்பது போன்ற சிற்பமும், புலி வாயைப் பிடித்து ஈட்டியால் குத்துவது போன்ற சிற்பங்களும் இருக்கின்றன. மேலும் இதற்கு அருகில் ஒரு ஆணும் பெண்ணும் வணங்குவது போன்ற சிற்பமும், ஆணின் கையில் ஆயுதம் இருப்பது போன்று சிற்பமும் இருக்கின்றன. இவை 16, 17 -ம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பாளையத்துக்காரர்கள் சிற்பம் எனவும் உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் இதுபோன்ற சிற்பங்கள் அதிக அளவில் உள்ளன'என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்