குருபரப்பள்ளி அருகே சிப்காட் நிலத்தில் கட்டிய முனியப்பன் கோவில் இடித்து அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே சிப்காட் நிலத்தில் கட்டிய முனியப்பன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முனியப்பன் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி சிப்காட் அருகே எண்ணேகொள் செல்லும் வழியில் அப்பகுதி மக்கள் முனியப்பன் கோவில் கட்டுவதற்ககு ஏற்பாடு செய்தனர். ஆனால் அது சிப்காட்டுக்கு சொந்தமான நிலம் என்பதால் அங்கு கோவில் கட்ட அனுமதிக்ககூடாது என சிப்காட் நிர்வாகம் வருவாய் துறையினருக்கு மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கருங்கற்களால் மேடை, படிக்கட்டுகள் அமைத்து முனியப்பன் சிலையை வைத்து கோவில் கட்டும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சம்பத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்றனர். இதையடுத்து கோவிலை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சிப்காட் நிலத்தில் கோவில் கட்டுவது தவறு. உங்களுக்கு வேறு இடம் வழங்க பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இடித்து அகற்றம்
இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாபபுக்காக நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.