தொலைநோக்கி மூலம் வியாழன்கோளை பார்த்த பொதுமக்கள்
தொலைநோக்கி மூலம் வியாழன்கோளை பொதுமக்கள் பார்த்தனர்
சிவகங்கை,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கை கிளையில் வான் நோக்கு நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட கவுரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் தலைமை தாங்கினார். அறிவியல் பிரசார இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய மேரி வான் நோக்கு நிகழ்வுகள் பற்றி எடுத்துக் கூறினார். 2 தொலைநோக்கிகள் வைத்து பொதுமக்கள், குழந்தைகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு தொலைநோக்கி மூலம் ஆரோக்கிய மேரி, கிளை பொருளாளர் சங்கரலிங்கம், மற்றொரு தொலைநோக்கி மூலம் கிளை செயலாளர் அனந்த கிருஷ்ணன், வட்டார செயற்குழு உறுப்பினர் ராஜ சரவணன் ஆகியோர் வானில் வியாழன் கோளை சுற்றி காணப்படும் சிறிய நிலாக்கள் பற்றி எடுத்துக் கூறினா். தொலைநோக்கி மூலமாக வியாழன்கோளை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இதேபோல் காளையார்கோவில் கிளையில் வான்நோக்குதல் நிகழ்ச்சி காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் வீரபாண்டி, கவுரவத் தலைவர் நாகலிங்கம் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஆரோக்கிய ஜெய சாலமன் வரவேற்றார்.