டாஸ்மாக் பாரில் தகராறு வாலிபர் கத்தியால் குத்திக்கொலை - நண்பர் படுகாயம்

டாஸ்மாக் பாரில் சிகரெட் பிடிக்கும்போது நெருப்பு பட்டதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-06 09:06 GMT

சென்னை அயனாவரம், வரதம்மாள் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவருடைய நண்பர் கார்த்திக் (29). இவர்கள் இருவரும் தனியார் கம்பெனியில் கியாஸ் ஸ்டவ் மெக்கானிக் வேலை செய்து வருகின்றனர்.

நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அயனாவரம் ஒத்தவாடை தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது குமார் சிகரெட் பிடிக்கும்போது அருகில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த எ.சி.மெக்கானிக் முகமது பியாஸ் (25) மீது நெருப்பு பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட முகமது பியாசை, குமார் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கையால் சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய முகமது பியாஸ், வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து குமார் மற்றும் கார்த்திக்கை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் கார்த்திக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலையான குமாருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், தியா (4), சம்யுக்தா (2) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்