வாலிபர் குத்திக் கொலை; நண்பர் கைது

நாகர்கோவிலில் வாலிபரை குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். மது குடிக்காதே என அறிவுரை வழங்கிய முன்விரோதத்தில் இந்த வெறிச்செயல் நடந்துள்ளது.

Update: 2023-08-29 19:56 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வாலிபரை குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். மது குடிக்காதே என அறிவுரை வழங்கிய முன்விரோதத்தில் இந்த வெறிச்செயல் நடந்துள்ளது.

நண்பர்கள் இடையே தகராறு

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கைலாஷ்கார்டன் முதல் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 23). இவர் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில் தற்காலிக கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அத்துடன் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இவருடைய நண்பர் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பேச்சி என்ற இசக்கிமுத்து (23). இவர் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார்.

இசக்கிமுத்துவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தை விட்டுவிடும்படி மனோஜ் கூறி வந்தார். இதுதொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதன்காரணமாக கடந்த தீபாவளி பண்டிகையன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பரிதாப சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் மனோஜ் கிருஷ்ணன்கோவில் வடக்குரத வீதியில் தெப்பக்குளத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிமுத்து முன்விரோதம் காரணமாக மனோஜை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து தான் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் மனோஜின் கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த மனோஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே இசக்கிமுத்து அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மனோஜை மீட்டு வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

சாத்தான்குளத்தில் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மனோஜின் அண்ணன் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடினர். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சாத்தான்குளத்தில் பதுங்கியிருந்த இசக்கிமுத்துவை நேற்று காலையில் கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 'எங்களுக்குள் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக குடிபோதையில் இருந்த நான் ஸ்குரூ டிரைவரால் குத்தி கொலை செய்தேன்' என ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நாகர்கோவில் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்