வாலிபருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
கொள்ளிடம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தோப்பு வட்டாரம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் மதியழகன்(வயது22), குருவியாம்பள்ளம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அருள் மகன் கார்த்திக்ராஜா(23). இவர்கள் இருவரும் நேற்று தோப்பு வட்டாரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது மதியழகன் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்ராஜாவை குத்துவதற்கு ஓங்கியுள்ளார். அதனை தடுத்த கார்த்திக்ராஜா கத்தியை பிடுங்கி மதியழகன் கழுத்து மற்றும் வலது கையில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மதியழகன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மதியழகன் அளித்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.