பழனி பஸ்நிலையத்தில் பரபரப்பு: வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து
பழனி பஸ்நிலையத்தில் 2 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் தாக்கியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பழனி:
பழனி பஸ்நிலையத்தில் உடுமலை டவுன் பஸ்கள் நிற்கும் நடைமேடை பகுதியில் இன்று இரவு 7 மணி அளவில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது திடீரென ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொருவரை கால், தோள்பட்டையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைக்கண்டதும் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் பழனி டவுன் போலீசார் பஸ்நிலையத்துக்கு வந்து காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அவரிடம் விசாரித்தபோது, அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கோவிந்தன் (வயது 32) என்பதும், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது.
பின்னர் வெட்டியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பழனி பஸ்நிலையத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.