டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

கடலூரில் நடந்த விபத்தில் டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி கண்ணாடியை பொதுமக்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-03 16:37 GMT

கடலூர், 

கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் ஏழைமுத்து. இவருடைய மகன் சுனில்குமார் (வயது 18). இவர் நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங் கிருந்து மதியம் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். அவர் செம்மண்டலம்- கம்மியம்பேட்டை சாலையில் சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது டிப்பர் லாரியின் பின் சக்கரம் சுனில்குமார் மீது ஏறி நின்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வாக்குவாதம்

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் திடீரென டிப்பர் லாரியின் முன் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் விபத்தில் பலியான சுனில்குமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி ஏழைமுத்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த விபத்தால் அந்த பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்