லோடு ஆட்டோ மோதி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
லோடு ஆட்டோ மோதி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
லோடு ஆட்டோ மோதி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நண்பர்கள்
காயல்பட்டினம் பெரிய நெசவுத்தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் முபின் (வயது 24). இவர் தனது நண்பர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் கனி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் முருகன் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
ஆறுமுகநேரி அருகே பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்ற போது, ஆறுமுகநேரியில் இருந்து காயல்பட்டினம் நோக்கி வந்த ஒரு லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் முகமது மைதீன் முபின், அப்துல் கனி, கதிர்வேல் முருகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வாலிபர் பலி
இதில் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட முகமது மைதீன் முபின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது மைதீன் முபின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் முத்து சிந்தலை என்ற மகேஸ்வரன் (22). இவரது நண்பர் திருச்செந்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் வினோத் (24). இவரது தங்கைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளது. அவர்களை பார்ப்பதற்காக வினோத், மகேஸ்வரன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
ஆறுமுகநேரி ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் வரும் போது, அந்த வழியாக ஒரு டிராக்டர் வந்தது. அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் விேனாத், மகேஸ்வரன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.