ஏற்காடு மலைப்பாதையில்மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து வாலிபர் பலி
ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து வாலிபர் பலியானார்.
ஏற்காடு,
ஏற்காடு மலையடிவாரத்தில் குப்பனூர் சுக்கம்பட்டியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 19). இவர்களின் பூர்வீக ஊர் ஏற்காடு முண்டகாம்பாடி ஆகும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஏற்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு உணவு எடுத்து வருவதற்கு சென்றார். அங்கிருந்து அவர் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பெலாத்தூர் அருகே வந்த போது மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் சறுக்கியபடி சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே நள்ளிரவில் அவர் இறந்தது அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்த நிலையில் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் சசிக்குமார் தம்பியை தேடி அந்த மலைப்பாதையில் அதிகாலையில் சென்றார். அப்போது சாலையின் நடுவில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து ஸ்ரீதர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஏற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.