மரத்தில் கார் மோதி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
திருக்கடையூர் அருகே திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநள்ளாறு கோவிலுக்கு சென்றனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா நிம்மாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாது மகன் அன்பரசு (வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முனியப்பன் (28), கைலாஷ் (24), விஷ்ணு (24), சுப்பிரமணி (24). உறவினர்களான இவர்கள், நிம்மாங்கரையில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு சென்று கொண்டிருந்தனர். காரை அன்பரசு ஓட்டி சென்றார்.
மரத்தில் கார் மோதி வாலிபர் பலி
நேற்று அதிகாலை 4 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே சிங்கனோடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.
இதில் காரின் முன் பகுதி அப்பளம் போது நசுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அன்பரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேர் படுகாயம்
மேலும் காரில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த முனியப்பன், விஷ்ணு ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் வந்த கைலாஷ், சுப்பிரமணி ஆகியோர் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அன்பரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பொறையாறு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.