வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை-போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
வீராணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை
சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு சீரிக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். அவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 22). இவர் வேடுகாத்தாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஜெகதீஸ்வரனுக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதற்கு தொடர்ந்து சிகிச்சைக்கு பெற்றதால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் லட்சுமணன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டில் ஜெகதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடக்கம் செய்ய முயற்சி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தெரியாமல் மகனின் உடலை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் இருக்கும் வீட்டின் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து ஜெகதீஸ்வரன் உடலை உறவினர்கள் உதவியுடன் அங்கு எடுத்து செல்லப்பட்டது.
இதனிடையே இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ஜெகதீஸ்வரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.