பெற்றோர் எதிர்ப்பால் விடுதியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

2 குழந்தைகளின் தாயாரை திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விடுதியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-18 20:25 GMT

நாகா்கோவில்:

2 குழந்தைகளின் தாயாரை திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விடுதியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விஷம் குடித்த வாலிபர் சாவு

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஒரு விடுதி உள்ளது. நேற்று காலையில் அங்குள்ள ஒரு அறையில் இருந்து இளம்பெண் கதறி அழும் சத்தம் கேட்டது. உடனே விடுதி ஊழியர்கள் அந்த அறைக்கு ஓடிச் சென்றனர். அங்கு ஒரு இளம்பெண் வாலிபர் ஒருவரை கட்டியணைத்தப்படி அழுதார். அதே சமயத்தில் அவர் விஷம் குடித்து விட்டதாக இளம்பெண் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

உடனே இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பாிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வாலிபர் யார்? அவருடன் விடுதியில் தங்கியிருந்த பெண் யார்? என போலீசார் விசாரணையை தொடங்கினர்.

போலீஸ் விசாரணை

முதலில் அந்த பெண் மவுனம் காத்தார். பின்னர் மகளிர் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியானது.

அதாவது 2 குழந்தைகளின் தாயாருடனான காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதுபற்றிய விவரம் வருமாறு:-

காதல்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் இளைய மகன் விஜய் (வயது 23). இவர் ஆசாரிபள்ளம் பகுதியில் தள்ளுவண்டி வைத்து துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது கடைக்கு துணிகளை இஸ்திரி செய்ய ராமன்புதூர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளம்பெண் வந்துள்ளார். அந்த சமயத்தில் விஜய்க்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மேலும் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். எனினும் விஜய்க்கும், 2 குழந்தைகளின் தாயாருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்து சந்தோசமாக இருந்துள்ளனர்.

பெற்றோர் எதிர்ப்பு

இந்த விவகாரம் அரசல் புரசலாக விஜய்யின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி கண்டித்தனர். ஆனால் அவரால் இளம்பெண்ணை மறக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்ய விஜய் முடிவு செய்தார். இந்த ஆசையை அவர் வெளிப்படுத்த 2 குழந்தைகளின் தாயாரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி நாகர்கோவிலில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு விஜய் தாலி கட்டி திருமணமும் செய்தார். பிறகு பார்வதிபுரம் பகுதியில் உள்ள விடுதியில் கணவன், மனைவி என கூறி கடந்த 3 நாட்களாக விஜய்யும், இளம்பெண்ணும் தங்கினர்.

தற்கொலை

இதற்கிடையே நடந்த விஷயத்தை கூறி பெற்றோர் சம்மதத்தை வாங்க விஜய் சென்றார். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. முறை தவறிய காதலை ஏற்க பெற்றோர் மறுத்து விட்டதால் மிகவும் மனமுடைந்த நிலைக்கு சென்றார்.

மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்தபடி விடுதிக்கு சென்றார். அங்கு உருக்கமாக பேசி தன்னுடைய காதலியிடம் கதறி அழுதார். நம்மை சேர்த்து வைக்க மாட்டார்கள், இதனால் நான் சாகப்போகிறேன் என கூறியுள்ளார். அந்த சமயத்தில் விஜய் வாயில் இருந்து நுரை தள்ளியது.

இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கதறி அழுததும், பின்னர் போலீசார் மீட்டு விஜய்யை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்