பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு சென்ற போது தாக்கியதால் வாலிபர் தற்கொலை
களம்பூர் அருகே மாணவியை பெண் கேட்டு சென்ற போது தாக்கியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
களம்பூர் அருகே மாணவியை பெண் கேட்டு சென்ற போது தாக்கியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் சாம்ராஜ் (வயது 20), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால் மாணவி அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாணவியின் பெற்றோர், சாம்ராஜ்யை அழைத்து கண்டித்துள்ளனர்.
இதனால் மாணவி, பெற்றோர் சொல்லும் உறவினர் மகனையே திருமணம் செய்து கொள்வதாக காதலனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவி, காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் சாம்ராஜ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் காதலி வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் தந்தை, சாம்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாலை மறியல்
இதுகுறித்து சாம்ராஜின் தாய் செல்வராணி களம்பூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், என் மகன் சாவுக்கு காரணமானவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாம்ராஜ் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் களம்பூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டது. சாம்ராஜை தற்கொலைக்கு தூண்டியதாக காதலியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.