சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

குளித்தலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 18:52 GMT

சிறுமி கடத்தல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குளத்துக்கரை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 30). இவர் பூ விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி கோயம்புத்தூர் பகுதிக்கு சென்று விட்டதாகவும் தற்போது ஊருக்கு வருவதாக அச்சிறுமி தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாக்கியராஜ் மற்றும் அச்சிறுமி ஆகிய இருவரும் குளித்தலை வந்துள்ளார். அச்சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது, கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது மல்லிகை தோட்டத்திற்கு தன்னை வரச் செய்த பாக்கியராஜ் தனக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதனால் தனக்கு 2 மாதமாக மாதவிலக்கு தள்ளிப்போனது என்றும் இது குறித்து பாக்கியராஜிடம் அச்சிறுமி கூறினாராம்.

சிறுமி கர்ப்பம்

பின்னர் தனது தோட்டத்திற்கு அச்சிறுமியை அழைத்து கர்ப்பம் கண்டறியும் சிறு கருவி மூலம் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது தான் கர்ப்பமானது தெரியவந்தது. இதையறிந்த பாக்கியராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், எனவே நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என கூறி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். அப்போது அந்த உறவினர் பாக்கியராஜின் தந்தைக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாக்கியராஜிடம் பேசிய அவரது தந்தை சுப்பிரமணி வீட்டிற்கு வரவில்லையெனில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். அதன் பிறகு பாக்கியராஜ் அச்சிறுமியை குளித்தலைக்கு அழைத்து வந்ததாக அச்சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை விளக்கி கூறியுள்ளார்.

போக்சோவில் கைது

இதையடுத்து அச்சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பாக்கியராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்