புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழக்கம்:புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது

Update: 2022-08-27 20:42 GMT

புதூர்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் மிரட்டுகிறார்

மதுரை திருமோகூர் பெருங்குடியை சேர்ந்த ஒருவர், என் மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக ஈரோடு வாலிபர் மிரட்டுகிறார் என்று ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

மிரட்டல்

அவர் கூறும்போது, எனக்கு ஈரோடு சந்திரசேகருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு என் புகைப்படத்தை அனுப்பி வைத்தேன். அதனை பார்த்த சந்திரசேகர் என்னை காதலிப்பதாக கூறினார்.

அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், நீ என்னை காதலிக்க வேண்டும். இல்லையெனில் உன் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.

கைது

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் ஈரோடு மாவட்டம், சித்தோடு, செங்குந்தபுரத்தை சேர்ந்த சந்திரசேகர்(வயது 25) என்று தெரியவந்தது. அவரை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் எனக்கு பெருங்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவளிடம் நான் என் காதலை தெரிவித்தேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதனால் கையை பிளேடு கொண்டு தன்னைத்தானே அறுத்துக் கொண்டேன்.. இதன் பின்னர் நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி வந்தோம். இந்த நிலையில் அவள் என்னை திடீரென நிராகரிக்க தொடங்கினார்..

இதுபற்றி அறிந்த நான் மதுரைக்கு நேரடியாக வந்து விசாரித்தேன். அப்போது அவளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரியவந்தது. நான் பெண் கேட்டும் தர மறுத்தனர். இதன் பின்னர் நான், அந்த பெண்ணிடம் உனது புகைப்படத்தில் மார்பிக் செய்து இணையத்தில் பரப்புவேன் என்று மிரட்டினேன் என்று தெரிவித்தார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்