நோயாளிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
விக்கிரவாண்டி:
முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் செ.குன்னத்துாரை சேர்ந்த பன்னீர்செல்வம்(வயது 40) என்பவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உதவியாளராக மனைவி வனிதா(37) இருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வார்டுக்குள் வந்த வாலிபர், பன்னீர்செல்வம் மற்றும் அவரது பக்கத்து கட்டில் சிகிச்சை பெற்ற ஸ்டீபன் என்பவரது செல்போனை திருடினார். இதைப்பார்த்த வனிதா கூச்சலிட்டு, அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வளவனுார் அருகே உள்ள ராமையன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போனும் மீட்கப்பட்டது.