கஞ்சா விற்ற வாலிபர் கைது 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சிதம்பரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் கையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவருக்கு சொந்தமானது இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் கீழ மூங்கிலடி தயாகுப்பம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கேப்டன் பிரபாகரன்(வயது 35) என்பதும், 4 மோட்டார் சைக்கிள்களில் மாறி மாறி கஞ்சாவை கொண்டு வந்து நகர பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா, 5 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.