(செய்தி சிதறல்) போதை மாத்திரை, ஊசி விற்ற வாலிபர் கைது

Update: 2023-03-15 19:46 GMT

போதை மாத்திரை, ஊசி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போதை ஊசிகள்

திருச்சி குழுமணி ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் நேற்று உறையூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருச்சி பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன் (வயது 23) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை

* திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வராஜ் (20). பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்றதாக இவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மிரட்டல்

* திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் மதுரை ரோடு பகுதியில் தள்ளு வண்டி கடையில் சமோசா கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காந்திமார்க்கெட் குடிசை மாற்றுவாரிய பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (20) என்பவர் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர்.

மூதாட்டி மீது தாக்குதல்

*திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நீலாவதி (73). இவர் அந்த பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டார். இங்கு திருச்சி மலைக்கோட்டை சாமிநாத தெருவை சேர்ந்த ரங்கசாமி (43) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.இவர் கடந்த சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நீலாவதி ரங்கசாமியிடம் வாடகை கேட்டுள்ளார். அப்போது வாடகை தர மறுத்த ரங்கசாமி மற்றும் அவரது மனைவி ரஞ்சனி ஆகியோர் சேர்ந்து நீலாவதியை திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்