சங்ககிரி:-
சங்ககிரி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அவரின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த வாலிபரே, தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்ததால் லாரிடிரைவரை கொன்று விட்டு விபத்து என திசை திருப்பியதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விபத்தில் டிரைவர் பலி
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கிடையூர் மேட்டூர் கிழக்கு வளவு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 35). இவர் கிடையூரில் தனியார் குவாரியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 12-ந் தேதி இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
கிடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பழனிவேல் சென்ற போது, நிலைதடுமாறி தனது மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்து அவர் இறந்து விட்டார் என்று கிடைத்த தகவலின் பேரில் சங்ககிரி போலீசார் விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கள்ளக்காதல்
இந்த நிலையில் சங்ககிரி போலீசுக்கு பழனிவேல் இறந்தது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பள்ளிபாளையம் பிரிவு ரோடு புது காலனி அருந்ததியர் தெருவை சேர்ந்த கார்த்திக் (29) என்பவருக்கும், பழனிவேலின் மனைவி கனகவள்ளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிக்கு, கார்த்திக் பற்றி பல தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து கார்த்திக்கை பிடித்து போலீசார் அதிரடியாக விசாரித்ததில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பழனிவேைல கொலை செய்து விட்டு அவர் விபத்தில் இறந்தது போன்று திசை திருப்ப முயன்றது தெரியவந்தது.
கைது
இதையடுத்து பழனிவேல் இறந்த விபத்து வழக்கை கொலைவழக்காக மாற்றி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
பெயிண்டரான நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ெசன்னையை சேர்ந்த உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்ற எனது மனைவி மகள் பிறந்த பிறகு எனது வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் தான் பள்ளிபாளையம் பிரிவு ரோடு புதுகாலனியில் எனது வீட்டின் அருகே பழனிவேல் வாடகை வீட்டுக்கு குடிவந்தார். பழனிவேல் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருடைய மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து வந்தோம்.
இந்த விவகாரம் பழனிவேலுக்கு தெரியவர எங்கள் இருவரையும் கண்டித்தார். அதன்பிறகு பழனிவேல், பள்ளிபாளையம் பிரிவு ரோடு வீட்டை காலி செய்து விட்டு கிடையூர் மேட்டூர் அருந்ததியர் தெருவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இதனால் நான் எனது கள்ளக்காதலியை தொடர்புகொள்ள முடியவில்லை. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தததால் பழனிவேலை தீர்த்துகட்டிவிட்டால் அவளுடன் சந்தோசமாக இருக்கலாம் என முடிவுசெய்தேன்.
அதன்பிறகு கடந்த 12-ந் தேதி இரவு பழனிவேலுடன் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி விட்டு இருவரும் கிடையூர் மேட்டூருக்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றோம். கிடையூர் மேட்டூர் கீரைக்காடு பகுதிக்கு சென்றபோது கள்ளத்தொடர்பு சம்பந்தமாக எனக்கும், பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது பழனிவேலை கீழே தள்ளி அவரது தலையை தார் ரோட்டில் மோதி தாக்கினேன். பிறகு அருகில் கிடந்த கல்லை எடுத்து பழனிவேலின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சுயநினைவின்றி மயக்கம் அடைந்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் பழனிவேலின் செல்போனை எடுத்து அவரது உறவினர் ஒருவருக்கு குடிபோதையில் பழனிவேல் கீரைக்காடு பகுதியில் நிலைதடுமாறி விழுந்து கிடப்பதாக தகவல்கூறிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.