போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தோட்டக்கலை தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனீ வளர்ப்பு
மடத்துக்குளம் வட்டாரம் சங்கரராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் காய்கறி நாற்றுகள், பழக்கன்றுகள் மற்றும் பலவிதமான மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பூங் கொத்துகள் தயாரித்தல், பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் வட்டார அலுவலகங்களில் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சிகளில் பெண் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை வார வேலை நாட்களில், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி பயிற்சி அளிக்கப்படும். அரசு தோட்டக்கலை பண்ணையில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் டான்ஹோடாவால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனங்களின் நிபுணர்களை கொண்டு செயல் விளக்கத்துடன் நேரடியாக பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்கப்படும்.மேலும் பயிற்சி பெறும் 30 நாட்களுக்கும் போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ. 100 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயிற்சிக்கான விண்ணப்பத்தை தோட்டக்கலைத்துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
முன்னுரிமை
மடத்துக்குளம் வட்டாரத்தில் 10 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
----