கரும்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
கடலூரில், கரும்பு விவசாயிகளுக்கு மாநில அளவிலான தொழில்நுட்ப பயிற்சியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அளவிலான தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதிப்பு கூட்டுதல்
இந்த பயிற்சியின் நோக்கம் "இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம்". அந்த வகையில் தற்போது உள்ள சராசரி உற்பத்தியான 40 டன் கரும்பு மகசூலை அதிகரிக்கும் வகையில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்களும், கரும்பு ஆராய்ச்சி துறை சார்ந்த பேராசிரியர்களும், பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள இந்த பயிற்சி ஏதுவாக இருக்கும்.
வேளாண்மையில் விவசாயிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திட உற்பத்தியை மதிப்பு கூட்டுதல் செய்வது மிக முக்கியம். மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை சந்தை படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் பயிற்சியில் கற்றுக்கொண்ட புதிய தொழில் நுட்பங்களை தங்களது வயல்களில் செயல்படுத்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
அதைத்தொடர்ந்து கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வயல்களை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், வேளாண்மை துணை இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குனர்கள், கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.