போதை பொருட்களை ஒழிக்க குழுக்கள் அமைத்து வாகன சோதனை

வால்பாறை போலீஸ் சரகத்தில் போதை பொருட்களை ஒழிக்க குழுக்கள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தெரிவித்தார்.

Update: 2023-02-08 19:00 GMT

பொள்ளாச்சி

வால்பாறை போலீஸ் சரகத்தில் போதை பொருட்களை ஒழிக்க குழுக்கள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தெரிவித்தார்.

வாகன சோதனை

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தலா 10 பேர் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் நேற்று அதிகாலை ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பஸ்கள், கார்கள் உள்பட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. இதேபோன்று மற்றொரு குழுவினர் தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் கூறியதாவது:-

பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்

வால்பாறை சரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) 2 குழுக்கள் அமைத்து மீனாட்சிபுரம், ஆழியாறில் வாகன சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்பு கிலோ கணக்கில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது பறிமுதல் செய்யப்படும் அளவு மிக, மிக குறைந்துள்ளது. பொதுமக்களும் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு குறித்து அறிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்