கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயல் தலைவர் ராமர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். மத்திய அரசைப்போல், தமிழக அரசும் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கணேஷ்ராஜா வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.