ஆழ்வார்திருநகரியில் 25 பவுன் நகை கேட்டு ஆசிரியையின் கணவர் கடத்தல்: 2½ வயது குழந்தை மீட்பு

ஆழ்வார்திருநகரியில் 25 பவுன் நகை கேட்டு ஆசிரியையின் கணவர் 2½ வயது குழந்தையுடன் கடத்தப்பட்டார். அந்த குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-11-08 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரியில் 25 பவுன் நகை கேட்டு ஆசிரியையின் கணவர் 2½ வயது குழந்தையுடன் கடத்தப்பட்டார். அந்த குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

ஆசிரியையின் கணவர்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் குருஸ் அலெக்சாண்டர். இவருடைய மனைவி பிரான்சிஸ் விண்ணரசி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுமித் என்ற 2½ வயது ஆண் குழந்தை உள்ளது.

பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரி வேலன் காலனியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தையை குருஸ் அலெக்சாண்டர் கவனித்து வந்தார்.

நகை கேட்டு கடத்தல்

நேற்று முன்தினம் காலை பிரான்சிஸ் விண்ணரசி பள்ளிக்கு சென்றார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. உடனே அவர் தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு இருப்பதாக வந்தது.

பின்னர் மாலை 5 மணியளவில் மீண்டும் தொடர்பு கொண்டபோது அதில் பேசிய குருஸ் அலெக்சாண்டர், தான் ஒரு பிரச்சினையில் சிக்கி இருப்பதாகவும், 25 பவுன் நகை கொண்டு வந்தால் தான் தன்னை கடத்தியவர்கள் விடுவிப்பார்கள் என்றும் கூறி உள்ளார்.

குழந்தை மீட்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது குழந்தை சுமித் மட்டும் நாசரேத் அருகே ஒரு இடத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று சுமித்தை பத்திரமாக மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.

பரபரப்பு

கடத்தி செல்லப்பட்ட குருஸ் அலெக்சாண்டர் எங்கே உள்ளார்? அவரை கடத்தி சென்றவர்கள் யார்? கொடுக்கல்-வாங்கல் தகராறில் அவரை யாரேனும் கடத்தினரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குருஸ் அலெக்சாண்டரையும், அவரை கடத்திய கும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்