ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல்லில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சரஸ்வதி வரவேற்றார். மாநில துணை தலைவர் ராஜரத்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் துரைராஜ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் மத்திய ஊதியக்குழுவின் ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகள் இணைப்பு மற்றும் கற்பித்தலுக்கு தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் நியமிக்கும் முடிவை தேசிய கல்வி கொள்கையில் இருந்து நீக்க வேண்டும்.
இதேபோல் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவின் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாநில துணை செயலாளர் ராஜன், மாவட்ட பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் பெலிக்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்பீட்டர், நிர்மலா மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.