கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா?; பெற்றோர், ஆசிரியர் கருத்து
கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா? என்பது குறித்து பெற்றோர், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.
தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கங்கோ செல்கிறார்கள். இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
விடுமுறை கால வாய்ப்பு
தேனியில் இருந்து ராஜஸ்தானுக்கு குடும்பத்துடன் புறப்பட்ட மதன்சிங்:- நான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவன். தேனியில் பல ஆண்டுகளாக செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறேன். எனது குழந்தைகள் தேனியில் உள்ள பள்ளியில் தான் படிக்கிறார்கள். தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை பார்க்க வேண்டும் என்று குழந்தைகள் கேட்கும் போது எல்லாம் செல்போனில் வீடியோ காலில் தான் காட்டிக்கொள்ள முடிகிறது. அடிக்கடி சொந்த ஊருக்கு செல்லவும் முடியாது.
இதுபோன்ற கோடை விடுமுறை காலங்களில் தான் குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு வர வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, குழந்தைகளை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு அவர்கள் விடுமுறையை கொண்டாடுவார்கள். நான் ஒரு வாரத்தில் திரும்பி வந்து விட்டு விடுமுறை முடியும் போது அங்கு சென்று அழைத்து வர திட்டமிட்டுள்ளேன். எனக்கு தெரிந்து என்னைப் போன்று வெளியூர்களில் தொழில் செய்யும் சிலர் சொந்த ஊருக்கு செல்லும் முடிவை கைவிட்டுள்ளனர். அவர்களால் நீண்ட தூரம் சென்று வருவதற்கு செலவுகள் அதிகம் ஆகும் என்பதால் பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அவ்வாறு அழைத்துச் சென்றாலும் ஓரிரு நாட்களில் திருப்பி அழைத்து வரும் நிலையும் இருக்கிறது.
உறவுமுறை அறிமுகம் தேவை
தேனியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜபிரபு:- எனது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி. பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளதால் சொந்த ஊரில் தாத்தா, பாட்டியை பார்க்க செல்ல வேண்டும் என்று குழந்தைகள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். பணி நிமித்தம் உடனடியாக புறப்பட்டுச் சென்று விடவும் முடியாது. விடுமுறை எடுக்க வேண்டும். கோடை விடுமுறை காலங்களில் சொந்த ஊரில் குழந்தைகளை விட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
இதுபோன்ற விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் போது அவர்களால் உறவினர்கள் யார்? உறவுமுறை என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அடிக்கடி ஊருக்கு செல்லாமல் இருக்கும் போது குழந்தைகள் தங்களின் சித்தப்பா, பெரியப்பாவை கூட உறவுமுறை தெரியாமல் மாமா என்று அழைப்பதை காணமுடிகிறது. எனவே, இதுபோன்ற விடுமுறை காலங்களிலாவது சொந்தம், பந்தங்களை நேரில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். விடுமுறை காலங்களில் குழந்தைகளை வேறு படிப்பு விஷயங்களில் சேர்த்து விடுவது அவர்களை மனச்சோர்வு அடையச் செய்யலாம். பள்ளியில் படித்துக்கொண்டே இருந்தவர்களுக்கு இந்த விடுமுறை என்பது ஓய்வுக்காகவும், கொண்டாட்டத்துக்காகவும் அமைய வேண்டும். அப்போது தான் அடுத்த கல்வியாண்டை உற்சாகமாக எதிர்கொள்வார்கள்.
பொருளாதாரம்-பாதுகாப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் சந்திரன்:- தேனி மாவட்டம் பெரும்பாலும் கிராமப்புறங்கள் சார்ந்தே இருக்கிறது. இங்கு உள்ளூர் மற்றும் அருகாமை கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகம் படிக்கின்றனர். பணி நிமித்தம் வெளியூர்களில் இருந்து வந்து பணியாற்றுபவர்களின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். அத்தகைய பெற்றோர்கள் இதுபோன்ற கோடை விடுமுறை காலங்களில் குழந்தைகளை தங்களின் ஊர்களுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். சில மாணவ-மாணவிகள் கோடை விடுமுறை விடுவதற்கு முன்பாகவே தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை பார்க்க சொந்த ஊர்களுக்கு செல்வதாக கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் சொந்த ஊர்களுக்கு செல்வதை விடவும் சுற்றுலா இடங்களுக்கு செல்வதை அதிகம் விரும்புகின்றனர். பெற்றோர்களும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதை விட சுற்றுலா இடங்களுக்கு ஓரிரு நாட்கள் அழைத்துச் சென்று விட்டு, மற்ற விடுமுறை நாட்களில் வேறு ஏதேனும் கல்வி அல்லது விளையாட்டு சார்ந்த சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். கிராமப்புற மாணவ-மாணவிகள் முன்பு எல்லாம் உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று கோடை விடுமுறையை கழிப்பார்கள். ஆனால், அதுபோன்ற பயணங்கள் இப்போது குறைந்து விட்டன. இதற்கு பொருளாதாரம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கிய காரணியாக இருக்கிறது. மொத்தத்தில் கோடை விடுமுறையில் சொந்த ஊர், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் வழக்கம் மங்கித்தான் வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோடை வெப்பத்தை வெல்வோம்
இயற்கை மருத்துவர்கள் கூறும் போது, 'கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பயணத்தின் போது கோடை வெப்பத்தை வெல்வது மிகவும் முக்கியம். குறிப்பாக வெப்பம், தலைவலி மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே, வெப்பமான காலநிலையை எதிர்த்து போராட தயாராக இருக்க வேண்டும். இதற்காக தளர்வான மற்றும் இலகுரக ஆடைகளை அணிய வேண்டும்.
தளர்வான, வெளிர் நிற ஆடைகள் மற்றும் பருத்தி மற்றும் கைத்தறி போன்ற துணிகளை அணிய வேண்டும். அவை சருமத்திற்கு இதமாகவும் காற்று பரவ ஏதுவாகவும் இருக்கும். மதிய நேரமாக இருந்தால் தலையில் தொப்பியும், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். கோடையில் நிறைய வியர்க்கும் என்பதால் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்வதுடன், சோடாக்கள், ஆல்கஹால் மற்றும் காபின் போன்ற நீரிழப்பு பானங்களைத் தவிர்க்கவும்.
அதேபோல், இலகுவான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் முடிந்தவரை எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கலாம். காரணம் அவை உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கின்றன. தர்பூசணிகள், தக்காளிகள், ஆரஞ்சுகள், பிளம்ஸ் மற்றும் திராட்சைகள் போன்ற நிறைய தண்ணீரைக் கொண்டிருக்கும் புதிய கோடைகாலப் பழங்கள் போன்ற காய்கறிகள் மற்றும் சாலடுகள் உண்ணுவதன் மூலம் நுண்ணூட்டச்சத்துகளை பெற முடியும். பயணத்தின் போது காகிதம் அல்லது துணி விசிறியை உடன் எடுத்துச் செல்லலாம். சூடான மதிய வேளை பயணங்களை தவிர்க்கலாம்' என்கின்றனர்.