"2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமில்லை" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-02 07:24 GMT

சென்னை,

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டனர். ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளனர்.

நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்