சாலையில் அமர்ந்து ஆசிரியை போராட்டம்

கொட்டாரம் அரசு பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-09-13 12:49 GMT

கொட்டாரம் அரசு பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு பள்ளி

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் கொட்டாரத்தை அடுத்த மந்தாரம்புதூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது40) என்பவர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இவர் அக்கவுண்டன்சி பாடப்பிரிவில் பாடம் நடத்தி வந்தார். இந்தநிலையில், இந்த பள்ளியில் உள்ள அக்கவுண்டன்சி தொழில்பாடப்பிரிவு திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த பிரிவில் படித்து வந்த மாணவர்களை பொருளாதாரம் மற்றும் உயிரியல் பாடபிரிவில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அக்கவுண்டன்சி பாடம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு ஆசிரியை லட்சுமி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

சாலையில் அமர்ந்து போராட்டம்

இந்தநிலையில்  காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியை லட்சுமி திடீரென பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆசிரியையின் போராட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். சக ஆசிரியைகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர் போராட்டத்தை தொடர்ந்தார். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதல் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆசிரியை போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்