2-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை: நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

திருவள்ளூரில் 2-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் போலீசில் புகார் செய்தார்.

Update: 2022-08-20 08:20 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் வேணுகோபாலபுரத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ரக்‌ஷன் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில் வகுப்பு எடுத்த ஆசிரியை ரக்‌ஷன் சேட்டை செய்ததால் தலையில் கொம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு சென்ற மாணவனின் தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதை கண்ட தாய் அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரியில் கொண்டு சென்ற வழியில் மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மாணவன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மாணவனின் தாய் சாந்தி பள்ளி நிர்வாகத்திடம் சென்று இது குறித்து கேட்டபோது பள்ளியின் தலைமையாசிரியர் உரிய பதில் அளிக்காததால், பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்