தீ விபத்தில் காயமடைந்த டீக்கடைக்காரர் சாவு

மோகனூர் அருகே சிலிண்டர் மாற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த டீக்கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-08-17 18:45 GMT

மோகனூர்

டீக்கடைக்காரர்

மோகனூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் சப்பாணி (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் சப்பாணி வழக்கம்போல் டீக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் டீக்கடையில் இருந்த வணிக சிலிண்டரில் கியாஸ் தீர்ந்து விட்டது. அப்போது கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (53) என்பவர் உதவியுடன், வீட்டு கியாஸ் சிலிண்டரில் இருந்து, வணிக சிலிண்டருக்கு கியாஸ் மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அருகில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் கியாஸ் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் சப்பாணி மற்றும் கணேசன் ஆகியோர் மீது தீப்பிடித்து உடலில் பரவியது. இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

சாவு

பின்னர் தீ விபத்தில் படுகாயம் அடைந்த சப்பாணி, கணேசன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்னர் சப்பாணியை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் குணசேகரன் (37) என்பவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சப்பாணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்