மேகமலைப் பகுதியில் தேயிலை ேதாட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

சின்னமனூர் அருகே மேகமலைப் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-15 19:00 GMT

சாலை சீரமைப்பு பணி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வன உயிரிகள் சரணாலய பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இ்ந்த பேரூராட்சியில் உள்ள மலைக்கிராமங்களில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

மலைக்கிராம மக்கள் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைக்கும் பணி நடந்தது. அதில் சின்னமனூரில் இருந்து இரவங்கலாறு வரை மலைப்பாதையில் சீரமைப்பு பணி தொடங்கியது. பணியின்போது மணலாறில் இருந்து மகாராசா மெட்டு வரை வனத்துறையினருக்கு சொந்தமான இடம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் சாலை சீரமைப்பு பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. மேகமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மலைக்கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

இந்நிலையில் சாலையை சீரமைக்க கோரியும், வனத்துறையை கண்டித்தும் நேற்று மேகமலை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்றும், மலைக்கிராம மக்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை சின்னமனூருக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் நேரில் சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கோரிக்கைகளை வனத்துறையினரிடம் தெரிவித்து தீர்வு காணப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்