மனைவி கண்முன் டெய்லருக்கு கத்திக்குத்து
திருப்பத்தூர் அருகே மனைரிகண் முன், டெய்லரை சரமாரியாக குத்திய மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கேட்டு தகராறு
திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 62). அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு வெற்றி செல்வன் (36) என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். வெற்றி செல்வன் சி.ஏ. முடித்து விட்டு சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணத்தைத்தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித்தர வேண்டும் என வெற்றிச்செல்வன், அவ்வப்போது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சரமாரி குத்து
இந்த நிலையில் ஆதிமூலம் நடத்தி வரும் கடைக்கு சென்ற வெற்றிச்செல்வன் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு 14 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஆதிமூலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நின்ற வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.