'டாட்டூ'-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம்
இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.
டாட்டூ-இந்த சொல் இன்றைய இளைஞர்களின் மந்திர சொல்லாக மாறி வருகிறது. ஆன்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர் ஒருவரை கூட காண முடியாது என்ற ரீதியில் தான் இன்றைய டாட்டூ மோகமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
பச்சை குத்துதல்
நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.
இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது.
நடிகர், நடிகைகள்
இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது, டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க ெதாடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது.
குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க ெமகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.
அழகானதா? ஆபத்தானதா?
இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.
எச்சரிக்கை அவசியம்
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி தோல் டாக்டர் ரம்யா:- பச்சை குத்துதல், டாட்டூ வரைதல் ஆகியவற்றை நன்மை, தீமை எனும் ரீதியில் பார்க்க முடியாது. இன்றைய காலத்தில் ஒவ்வொரு நபரும் தன்னை அழகுபடுத்தி கொள்ளவே டாட்டூ வரைந்து கொள்கின்றனர். ஆனால் டாட்டூ எவ்வாறு வரைந்து கொள்கிறோம் என்பது அவசியம். டாட்டூ வரைவதற்கு ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்தினால் எய்ட்ஸ் உள்பட பல நோய்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே சுகாதாரமான முறையில் டாட்டூ வரைந்து கொள்ள வேண்டும். டாட்டூ வரைந்து கொண்டால் லேசர் மூலம் தான் அழிக்க முடியும். எனவே டாட்டூ வரைந்து கொள்வதற்கு முன்பு சிந்தித்து வரைந்து கொள்ள வேண்டும். டாட்டூ வரைந்து கொள்வதால் ஒருசிலருக்கு ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
இளைஞர்கள் ஆர்வம்
டாட்டூ கலைஞர் கவுசிக் (திண்டுக்கல்):- பண்டைய காலத்தில் பச்சை குத்தி கொள்வது, இன்று டாட்டூவாக மாறி இருக்கிறது. இளைஞர்கள் டாட்டூ வரைந்து கொள்வதை நாகரிகமாக கருதுகின்றனர். கை, கால்களில் மட்டுமின்றி மார்பு, முதுகு, கழுத்து என பல இடங்களில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். அதற்கு இணையாக இளம்பெண்களும் டாட்டூ மீது ஆர்வமாக உள்ளனர். முன்பெல்லாம் அம்மா, அப்பா, வணங்கும் தெய்வத்தின் படம், பெயர்களை டாட்டூ வரைந்து கொள்வார்கள்.
தற்போது பெரும்பாலான இளைஞர்கள் காதலியின் பெயர், படத்தை டாட்டூவாக வரைய வருகின்றனர். காதலி பிறந்தநாளில் அவருடைய பெயரை டாட்டூ வரைவதில் பலருக்கு அலாதி பிரியம் உள்ளது. அதேபோல் மனைவி, குழந்தைகளின் படம், பெயர்கள், குழந்தைகளின் பாதம், பிறந்த தேதி, எடை ஆகியவற்றை குறிப்பிட்டு டாட்டூ வரைந்து கொள்கின்றனர். போலீஸ், ராணுவத்தில் பணியாற்றும் பலரும் சட்டை அணிந்தால் வெளியே தெரியாதவாறு டாட்டூ வரைகின்றனர். கண் புருவத்தில் குறைவாக முடி உள்ளவர்கள் நிறைய முடிகள் இருப்பது போன்று டாட்டூ வரைந்து கொள்கின்றனர்.
ஆன்மிகவாதிகள் விரும்பும் தெய்வத்தின் படத்தை கைகள், மார்புகளில் டாட்டூ வரைந்து கொள்ள விரும்புகின்றனர். எனவே டாட்டூ என்பது அனைத்து தரப்பினரும் விரும்பும் விஷயமாக மாறி இருக்கிறது. சின்னத்திரை நடிகர்கள், குறும்பட இயக்குனர்கள், அதிகாரிகள், போலீசார், ராணுவ வீரர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் டாட்டூ வரைந்து இருக்கிறேன். இதற்கு ஒருவருக்கு பயன்படுத்திய ஊசி, மையை பிற நபருக்கு பயன்படுத்துவது இல்லை. எனவே பாதுகாப்பான முறையில் டாட்டூ வரைந்து கொள்ளலாம். அதேபோல் பழைய டாட்டூவை லேசர் மூலம் அழிக்க தேவையில்லை. அதில் மற்றொரு டாட்டூவை வரைந்து மறைத்து விடலாம்.
அழகு, அடையாளம்
டாட்டூ கலைஞர் கணேஷ் கார்த்தி (பழனி):- பச்சை குத்துதல் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. மனிதர்கள் தங்களுடைய குலம், கூட்டம், சமூகநிலை, சமயம், நம்பிக்கை, வீரம், காதல் ஆகியவற்றை வெளிப்படுத்தி கொள்வதற்கு பச்சை குத்த தொடங்கினர். அது ஒருவித அக்குபஞ்சர் சிகிச்சையாகவும் கருதப்படுகிறது. நாகரிக வளர்ச்சியால் டாட்டூ என பெயர் மாறி இருக்கிறது. தெய்வங்கள், கோலம், தேள், பாம்பு போன்ற உருவத்தையும் டாட்டூவாக வரைகின்றனர்.
பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொள்ளவும், அடையாளத்துக்காகவும் டாட்டூ வரைகின்றனர். இதுதவிர அரசியல் தலைவர்கள், சின்னங்கள், நடிகர்களின் உருவத்தை டாட்டூ வரைந்து கொள்வதில் இளைஞர்களிடம் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆசியா, அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா நாடுகளிலும் டாட்டூ கலை பரவி இருக்கிறது. இன்றைய இளைஞர்களிடம் டாட்டூ வரைந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பெரும்பாலும் டாட்டூ வரைந்து கொள்கின்றனர்.
நினைவுகளை தருகிறது
தனியார் ஊழியர் பெரியசாமி (மேட்டுராஜக்காபட்டி, திண்டுக்கல்):- நமது முன்னோர்கள் பச்சை குத்தி கொண்டனர். அதுவே டாட்டூவாக மாறி இருக்கிறது. உடலில் டாட்டூ வரைந்து கொள்வது பழைய நினைவுகளை தருகிறது. அதற்காக பலரும் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். எனக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. எனவே உடுக்கையுடன், சிவன், காளி, துர்க்கை, முருகன் ஆகிய தெய்வங்களின் படத்தை வலது கையில் டாட்டூவாக வரைந்து இருக்கிறேன். அதை தினமும் பார்க்கும் போது இறைவன் என்னுடனேயே இருப்பதாக தோன்றும். மேலும் உடலையும், மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள தூண்டும். ஆடை அணிந்து கொள்வது போன்று டாட்டூ தேவையாக மாறிவிட்டது.
தனியார் நிறுவன அதிகாரி சரவணன் (கோவிந்தாபுரம், திண்டுக்கல்):- நான் சென்னையில் வேலை செய்த போது கைவிரலில் எனது பெயரின் எழுத்துகளை பச்சை குத்தினேன். பின்னர் வலது கையில் வரையாடு படத்தை பச்சை குத்தினேன். இவை அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால் எனது சகோதரி குழந்தையின் படத்தை ஒரு கையிலும், மறு கையில் தாய்-தந்தையின் பெயரையும் டாட்டூவாக வரைந்து இருக்கிறேன். இவை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது. வெளியூர் செல்லும் போது எனது கைகளை பார்க்கும் போது குடும்பத்தினர் கூடவே இருப்பதை போன்ற உணர்வு ஏற்படும். மேலும் டாட்டூ வரைந்து கொள்வதும் ஒருவித நாகரிகமாக மாறி இருப்பதால் நான் வரைந்து இருக்கிறேன்.
குழந்தையின் பாதம்
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த தம்பதி சூரியா-அஞ்சலி. இவர்கள் தங்களுடைய மகள் யாழினியின் கால் பாதத்தை கையில் டாட்டூவாக வரைந்தனர். இதுபற்றி சூரியா கூறுகையில், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். காதலிக்கும் போது அவருடைய படத்தை கையில் டாட்டூ வரைந்தேன். இந்த நிலையில் எங்களுக்கு யாழினி என்ற குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் கால் பாதம் லேசாக வளைந்து இருந்தது. அது 5 வயதில் தான் சரியாகும் என்றனர். ஆனால் 11 மாதங்களிலேயே அது ஓரளவு சரியாகி விட்டது. இது அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது. இது எங்களின் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். எனவே குழந்தையின் கால் பாதத்தை பெயருடன் டாட்டூ வரைந்து இருக்கிறோம், என்றார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
======
காதலி படத்தை மறைக்க டாட்டூ
திண்டுக்கல்லில் உள்ள ஒரு டாட்டூ நிலையத்துக்கு இளைஞர் ஒருவர் அரக்க பறக்க வந்துள்ளார். மேலும் தனது சட்டையை கழற்றி தனது மார்பில் இருக்கும் பெண்ணின் படத்தை காண்பித்து அதை அழிக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். லேசர் மூலம் அழிக்க அதிக பணம் செலவாகும் என்கின்றனர் என்று விரக்தியாக பேசி இருக்கிறார். உடனே மார்பில் இருக்கும் பெண்ணின் படம் பற்றி கேட்டுள்ளனர்.
அது தனது முன்னாள் காதலி என்றும், காதல் கைகூடவில்லை என்றும் இளைஞர் கூறியிருக்கிறார். அதோடு திருமணத்துக்கு வேறு பெண்ணை பார்க்க செல்ல இருப்பதால் பிரச்சினையாகி விடும். எனவே காதலி படத்தின் டாட்டூவை அழிக்க வேண்டும் என்று மன்றாடி இருக்கிறார். இதையடுத்து காதலியின் உருவம் தெரியாத வகையில் அதில் மற்றொரு டாட்டூ வரைந்து மறைத்து உள்ளனர். எனினும் புதிய டாட்டூ வரையும் போது காதலியை நினைத்து அவர் கதறி அழுது உள்ளார். இதுபோல் பழைய டாட்டூவை மறைத்து புதிய டாட்டூ வரையும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாக டாட்டூ கலைஞர்கள் கூறுகின்றனர்.