மாணவர்களுக்கு சுவையாகவும், தரமாகவும் உணவு வழங்க வேண்டும்

காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சுவையாகவும், தரமானதாகவும் உணவு வழங்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்

Update: 2022-09-20 18:45 GMT

விழுப்புரம்

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதை நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரால் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக விழுப்புரம் நகராட்சியில் 13 தொடக்கப்பள்ளிகளில் 1,594 மாணவ, மாணவிகளுக்கும், திண்டிவனம் நகராட்சியில் 6 பள்ளிகளை சேர்ந்த 261 பேருக்கும் பள்ளி வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.15 மணிக்குள் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது இப்பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், சாப்பிட்டு பார்த்து உணவு தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தரமாகவும், சுவையாகவும்

மேலும் மாணவ- மாணவிகள் உணவு சாப்பிடுவதற்கு முன்பு கை மற்றும் கால்களை நன்கு சுத்தம் செய்து கொண்டு உணவு அருந்துவதை ஆசிரியர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மாணவ- மாணவிகள் உணவு சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் தட்டு மற்றும் டம்ளர் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு முடித்த பிறகு நன்றாக சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவானது தரமானதாகவும், சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் தயார் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்