டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுமா?
வீரபாண்டி பகுதியில் சாலையோரம் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடக்கிறது. எனவே டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வீரபாண்டி பகுதியில் சாலையோரம் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடக்கிறது. எனவே டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மதுபாட்டில்கள்
திருப்பூர் பலவஞ்சிபாளையம் காளிகுமாரசாமி கோவில் பகுதியில் இருந்து கோவில்வழி செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலை தாராபுரம் சாலையை சென்றடைவதால் அதிகம் பேர் இந்த சாலையில் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் காளி குமாரசாமி கோவில் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் சாலையோரம் ஒரு கிலோ மீட்டர் தூரம் காலி மது பாட்டில்களும், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் குவிந்து கிடைக்கிறது. மேலும் பகல் நேரங்களில் பலரும் சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியாக செல்லக்கூடிய பெண்கள் மற்றும் மாணவர்கள் பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பலவஞ்சிபாளையம் பகுதியில் கோவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளது. முக்கிய சாலை பகுதியில் டாஸ்மாக் கடையால் மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். காலை முதலே மதுபானங்கள் விற்கப்படுகிறது. மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையின் நடுவே உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் முக்கிய சாலை வழியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை வேற இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.