காமராஜர் பிறந்தநாளன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழ்நாடு அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தீர்மானம்

காமராஜர் பிறந்த தினமான நாளை (சனிக்கிழமை) ‘டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-13 21:44 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.பி. ரஞ்சன்குமார் உள்பட மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாவது, 'பூத்' கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் பிறந்தநாளையொட்டி கே.எஸ்.அழகிரி 'கேக்' வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரியே நீடிக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது.

மதுக்கடையை மூடக்கோரி தீர்மானம்

பின்னர், கே.அஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் தன் வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிரியாக இருந்தார்.

எனவே காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதி (நாளை) அன்று ஒரு நாள் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு இதை அனுப்புவோம். அதற்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விஜய் மக்கள் இயக்கத்துக்கு பாராட்டு

காமராஜர் பயன்படுத்தி, 50 ஆண்டு காலம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த காரை எந்த பொருளையும் மாற்றாமல் மிக சிறப்பாக ஓடுகிற நிலைக்கு சீரமைத்துள்ளோம். இந்த கார் வருகிற 15-ந்தேதி (நாளை) காமராஜர் வாழ்ந்த விருதுநகர் இல்லத்துக்கு கொண்டு வரப்படும். இங்கு ஒரிரு நாட்களில் இருக்கும். அதன் பின்னர் அவருடைய மணி மண்டபத்தில் நிறுத்தப்படும். இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்துக்கு கொண்டு வரப்படும். மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை காமராஜர் பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதற்கு பாராட்டுகிறோம். நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளில் இரவு பாட சாலைகளை அமைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். ஆக்கப்பூர்வமான செயலில் விஜய் மக்கள் இயக்கம் இறங்கி உள்ளது. அதற்காக அவர்களையும் பாராட்டுகிறேன்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஆசைப்படலாம். அந்த ஆசைக்கு நாம் தடை விதிக்க முடியாது. ஆனால் இது நடக்காது. இதை நடக்க விட மாட்டோம். நாங்கள் (தமிழ்நாடு காங்கிரஸ்) நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் (துரைமுருகன்) பின்னால் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்