விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்-மதுரை ஐகோர்ட்டில் வாதம்
கேரளா உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
மதுபழக்கத்தில் முதல் இடம்
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
மது பழக்கத்தால் குடும்பப்பிரச்சினை, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றி அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
விடுமுறை நாட்கள்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை, வார விடுமுறை நாட்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் அங்கெல்லாம் பல்வேறு பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. அதேபோல தமிழகத்திலும் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டு மூலம் மது விற்பனையை அமல்படுத்தினால் பல்வேறு குளறுபடிகளை தவிர்க்கலாம் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் மது விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக விரிவான தகவல்களுடன் கூடுதல் மனுவை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.