ஜலகண்டாபுரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை அகற்றம்

ஜலகண்டாபுரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

Update: 2023-01-28 22:59 GMT

மேச்சேரி:

பொதுமக்கள் சாலைமறியல்

ஜலகண்டாபுரம் பொடையன் தெரு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடந்தது. இதனால் நேற்று முன்தினம் வாகனங்கள் மூலம் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, கடையில் வைக்கப்பட்டன. இதனை அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

டாஸ்மாக் கடை அகற்றம்

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தலைமையில் கடை முன்பு திரண்டனர். இதுகுறித்து அறிந்த மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும், கடையில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கடையை அகற்ற அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்த மதுபாட்டில்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன. டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்